Saturday, 28 January 2012


ஷாதுலிய்யா தரீக்கா
உலகில் தோன்றிய தரீக்காக்கள் பல. அவைகளில் புகழ்பெற்று பல நாடுகளில் பரவிய தரீக்காக்கள் சில. அவற்றில் முக்கியத்துவம் பெற்ற தரீக்காகளில் ஷாதுலிய்யா தரீக்காவும் ஒன்று. அதன் நிறுவனர் அல்லாஹ்வின் அன்பர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிவந்த அருமைப்பேரர், அவ்லியாக்களின் அரசர், அல்குத்புல் அக்பர், அல்கவ்துல் அஷ்ஹர் அஷ்ஷெய்கு நூறுத்தீன் அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி இமாம் (றளி) அவர்கள் வட ஆபிரிக்காவின் லிபியா நாட்டிலுள்ள “கிமாறா” என்ற ஊரில் ஹிஜ்ரி 593 (ஈசவி 1197)ல் பிறந்தார்கள். அன்னாரின் அன்னையின் பெயர் உம்முஹபீபா என்ற சாதிகுல்ஜன்னா. தந்தையின் பெயர் அப்துல்லாஹ் அமீறுல் முஃ;மினீன் இமாம் அலி (றளி) அவர்களின் திரு நாமமாகிய “அலி” என்ற பெயர் சூட்டப்பட்டது. அதனால் அபுல்ஹஸன் என்ற பெயர் உண்டானது. “ஷாதிலா” என்ற நகர் சென்று தீன்பணியைத் துவக்கியதால் “ஷாதுலி” என்ற பெயர் ஏற்பட்டது. (அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான நேசராகிவிட்டதால் “ஷாதுன்லீ” என்ற பெயரும் உண்டானதாக கூறப்படுகிறது) தீனுல் இஸ்லாத்திற்கு ஒளி ஏற்றியதால் “நூறுத்தீன்” என்ற புகழ் வந்தது.
சிறு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்தார்கள். மார்க்க கல்வி பயில பக்கத்து நாடான தூனிஸ் சென்றார்கள் பல ஞானங்களையும் கற்றுத் தேறியபின் காமிலான ஷெய்கைத் தேடியதாகத்தில் பல நாடுகள் சென்ற பின்னர் தமது நாட்டிலேயே தவம்புரிந்து கொண்டிருந்த மாமேதை ஷெய்கு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (றளி) என்ற ஞான குருவை சந்தித்து கரம்பிடித்து பைஅத் பெற்றார்கள். சிலகாலம் ஷெய்கு அவர்களின் தொடர்போடு அங்கு இருந்து தஸவ்வுஃப் என்ற ஞானம் பெற்றுபக்குவம் அடைந்தார்கள். சீடரின் பயபக்தியையும் மார்க்க ஞானத்தையும் அறிந்த ஷெய்கு மஷீஷ் (றளி) அவர்கள் “ஷாதிலா” என்ற நகர் சென்று மார்க்கப்பணிபுரிய கட்டளையிட்டார்கள்.
இமாம் ஷாதுலி நாயகம் (றளி) அவர்கள் தோற்றுவித்த ஞானவழிக்கு “ஷாதுலிய்யா தரீக்கா” என்ற பெயர் வழங்கப்பட்டது. அதற்கு “தரீக்கதுஷ்ஷூக்ர்” என்ற பெயரும் உண்டு. ஷெய்கு ஷாதுலி இமாம் அவர்கள் நற்போதனைகளை செவியேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் ஆற்றலையும் மார்க்க பேணுதலையும் பார்த்து அவர்களிடம் பைஅத் பெற்று இந்த தரீக்காவின் அனுஷ்ட்டானங்களை ஏற்று நடந்து வந்தார்கள். ஷாதுலி நாயகம் அவர்களின் புகழ் பல நாடுகளில் பரவியது. ஷாதுலிய்யா தரீக்காவை பின்பற்றக்கூடியவர்கள் அறபு உலகம் அனைத்திலும் வாழ்ந்து வருகிறார்கள் கேரளா, தமிழ் நாட்டில் பல ஊர்களிலும் மற்ற மாநிலங்களில் சில ஊர்களிலும் இந்த தரீக்கைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
ஷாதுலி இமாம் அவர்கள் ஹிஸ்புல்பஹ்ர், ஹிஸ்புந்நஸ்ர், ஹிஸ்புல்பர்ரு போன்று சில அவ்றாதுகளை இயற்றியுள்ளார்கள். பெரிய நூல்கள் எழுதவில்லை ஏன் பெரிய கிதாபுகள் எழுதவில்லை என்று கேட்கப்பட்டது.”குதுபீ அஸ்ஹாபீ”- எனது கிதாபுகள் எனது (சீடர்களான) தோழர்களே என்று ஷாதுலி இமாம் அவர்கள் பதிலளித்தார்கள் அதன்படி அவர்கள் வழியை ஏற்று ஏற்றம் பெற்ற ஏராளமானவர்கள் பெரும் இமாம்களாகவும் ஷெய்குமார்களாகவும் உருவாகி பல நூற்றுக்கணக்கான மார்க்க ஞான நூல்கள் இயற்றியுள்ளார்கள். அவை உலகப் புகழ்பெற்று இன்றும் அழியாது அரிய சேவை செய்துவருவதை அறியலாம். மேலும் இந்த தரீக்கின் ஷெய்குமார்களான இமாம் பூசரியுஷ்ஷாதுலி அவர்கள் உலகப்புகழ் “புர்தா ஷரிபை”யும் ஷெய்குசுலைமான் ஜெஸூரி அவர்கள் “தலாயிலுல் கைறாத்” என்ற தனிச்சிறப்பு பெற்ற சலவாத் கோர்வைகளையும், அல்குத்புர் ரப்பானீ அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஃறானீ இமாம் அவர்கள் “இலாஹீலஸ்து” மற்றும் பல நூற்றுக்கணக்கான அரிய நூல்களை இவ்வுலகுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்கள். மேலும் உலகம் பூராவும் அடிக்கடிபாடப்படும்.”அஸ்ஸூப்ஹூ பதா மின்தல் அதிஹி” என்ற பாடலை இயற்றிய நாஸிறுத்தீன் மைலக் என்ற பெரியாரும் இந்த தரீக்கை சேர்ந்தவர்களே.
பிற்காலத்தில் ஹிஜ்ரி 1289ல் (மறைந்த இரண்டாவது ஷாதுலி என்று பெயர் பெற்ற நமக்கு இந்த தரீக்கை தந்த இமாம் ஃபாஸி நாயகம் (றளி) அவர்கள் யாகூத்திய்யா என்ற சங்கை மிக்க சலவாத்தை இயற்றியதும் குறிப்பிடத்தக்கது. ஷாதுலிய்யா தரீக்காவில் அல்லாஹ்வை அடைய (நெருங்க) சில வழிகள் (விதிகள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை குர்ஆன் ஹதீது சட்டங்களுக்கு உட்பட்டவைகள்தாம். மார்க்கத்துக்கு மாற்றமான வீண் விளையாட்டு கேளிக்கைகளில் ஈடுபடாமல் மக்கள் மனதில் அல்லாஹ்வின் தியானத்தை உண்டாக்கவே உண்மையான தரீக்காக்கள் உருவானது. அதில் ஷாதுலிய்யா தரீக்கா தலையான கடமையான ஐங்காலதொழுகை, தக்வா, திக்ர், சலவாத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. காலை மாலை ஃபர்ள் தொழுகைக்குப்பின் நஃபில் தொழுகை, வளீஃபா என்ற சலவாத்து அவ்றாதுகள், திருக்குர்ஆணை தினமும் ஓதிவரவும் திக்ரில் ஈடுபடவும் தூண்டுகிறது. மேலும் தினசரி காலை மாலை இஸ்திக்ஃபார் 100 முறை சலவாத்து 100 முறை “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா 100முறை ஓதி இறுதியில் ஒரு முறை “முஹம்மதுர்-றஸூலுல்லாஹ்” என்று முடிப்பதும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெறுவதால் உலக ஆசைகளில் வீண் காலத்தை கழித்து சீரவழிவது தவிர்க்கபடுகிறதல்லவா.
திரு நபி (ஸல்) அவர்கள் தினமும் காலை மாலை 100 முறை இஸ்திக்ஃபார் செய்துள்ளார்கள் என்று ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளது. திருக்குர் ஆனும் பல இடங்களில் இஸ்திக்ஃபார் செய்யகட்டளை இடுகிறது. இதையே ஷெய்கு மஷீஷ் இமாம், ஷெய்கு ஷாதுலி இமாம் மற்றும் ஷாதுலிய்யா ஷெய்குமார்களும் செய்துவந்துள்ளார்கள். செய்யவும் ஏவியுள்ளார்கள்.
யார் ஈருலக நற்பாக்கியங்களை பெற நாடுகிறார்களோ அவர்கள் காலை மாலை ஹளறாவை (திக்று மஜ்லிஸை) பின்பற்றிக்கொள்ளட்டும்” என்று ஷாதுலிய்யா தரீக்காவில் கூறப்பட்டுள்ளது. மேலும் யார் இம்மை மறுமையின் கண்ணியத்தை அடைய விரும்புகிறார்களோ அவர்கள் இந்த நம்முடைய தரீக்காவில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் நுழைந்து கொள்ளட்டும்” என்றும் அழைப்பு விடப்படுகிறது.
ஷாதுலிய்யா தரீக்கா திக்று முறைகள்
உலகில் எல்லா நாடுகளிலும் ஷாதுலிய்யா திக்று முறைகள் ஒரே மாதிரி இருப்பது அதன் சிறப்பு அம்சமாகும். மேலும் எழுந்து திக்று செய்யும்போது அனைவரும் பாகுபாடின்றி ஒற்றுமையாக கைகோர்த்து வட்டமாக நின்று திக்ர் செய்வதும் அப்போது பல ஞானப்பாடல்களை (பைத்கள்) படித்து உற்சாகப்படுத்துவதும் இந்த தரீக்கில் மட்டுமே உள்ள சிறப்பாகும்.
திக்ர் மஜ்லிஸ் தொடங்கும் போது முதலாவது (இக்வான்கள்) சகோதரா;கள் வட்டமாக (ஹல்காவாக) கால்மடித்து உட்கார்ந்து அவூதுபிஸ்மி சொல்லி திருக்குர்ஆனின் திருவசனமான “ இன்னல்லாஹ வ மலா யிகதஹூ” என்று ஓதி துவங்கி “வளீஃபா” அரம்பிக்கப்படும். தொடா;ந்து “அல்லாஹூம்ம சல்லிவல்லிம் அலாமன்” ஜஅல்தஹூ” என்ற யாகூதிய்யா ஓதப்படும். முடிந்தபின் ஃபாத்திஹா சொல்லி துஆ ஓதிவிட்டு “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று உரத்தகுரலில் ஓன்று சோ;ந்து கூறப்படும். சில நிமிடங்கள் கழித்து எழுந்து வட்டமாக கைகோர்ந்து நின்று “அல்லாஹ்” என்ற திக்ர் முழக்கம் செய்யப்படும். பின்னா; “ஆஹ்” “அஹ்” என்ற நிலைக்குவந்து (இதன் விளக்கம் காயல்பட்டணம் ஜாவியா நூற்றாண்டு மலரில் விபரமாக கூறப்பட்டுள்ளது) இறுதியில் “அல்லாஹ்” என்று கலீஃபா உரத்த குரலில் சொல்ல அனைவரும் வட்டமாக கீழே உட்கார்வார்கள்.உட்கார்ந்த உடன் “கிறாஅத்” ஓதப்படும். அதை தொடா;ந்து ஞானப்பாடல்கள் (பைத்கள்) படிக்கப்படும். பின்னா; ஓதப்பட்ட ஆயத்துக்கு விளக்கம் கூறப்பட்டு “முதாகறா” செய்யப்படும். இது காலஇட சூழ்நிலையை கவனித்து மக்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடைபெறும் இறுதியில் “யாலதீஃப்” என்ற திக்ர் 100 முறையும் அதற்குப்பின் அதன் முறைப்படியும் ஓதப்படும். வெள்ளிக்கிழமையாக இருந்தால் இமாம் ஹரீரி (றஹ்) கோர்வை செய்த மவ்லிது ஷரிஃபு ஓதப்படும் திங்கட்கிழமையாக இருந்தால் இமாம் பூசரியுஷ்ஷாதுலி (றஹ்) அவர்கள் யாத்தளித்த புர்தாஷரிஃபு ஓதப்படும். இறுதியில் துஆ ஓதி கலிமாதையிபா என்ற (லாயிலாஹ இல்லல்லாஹ்) ஜலாலாவுடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.
ஷாதுலிய்யா தரீக்காவின் (உஸுல்கள்) அடிப்படை நோக்கம் ஐந்து:
  1. அகத்திலும் புறத்திலும் அல்லாஹ்வையே அஞ்சவேண்டும்.
  2. சொல்லிலும் செயலிலும் (ஷரிஅத்தை) சன்மார்க்க நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
  3. எல்லா காரியங்களிலும், வளமான வறுமையான நிலைகளிலும் படைப்பினங்களைப் புறக்கணித்து விட்டு படைத்த அல்லாஹ்வையே முன்னிலையாகக் கொள்ள வேண்டும்.
  4. அல்லாஹ்வின் அருட்கொடைகள் அதிகமாகவோ குறைவாகவோ அருளப்படும்போது அவை அல்லாஹ்வின் நாட்டம் என்று நினைத்து அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
  5. இன்பத்திலும் துன்பத்திலும் (நன்மை தீமை ஏற்படும்போது) அனைத்தும் அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நிகழ்வதாக முழு நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் அளவிலேயே திரும்பி விடவேண்டும்.
இந்த தரீக்காவுக்கு தலைமைப்பீடமாக ஷெய்கு இருப்பார்கள் இன்றும் இருந்து வருகிறார்கள். தலைமையகம் திருமக்காவில் இருக்கிறது. 1974ல் தலைமை ஷெய்காக இருந்த காலஞ்சென்ற டாக்டர் அல்ஃபாஸி (தாமத் பறகாத்துஹூம்) அவர்கள் நம் தமிழ் நாட்டில் பல ஊர்களுக்கும் வருகை தந்துசென்றது நினைவிருக்கலாம். அவர்கள் காலத்துக்குப்பின் இன்றும் தொடராக ஷெய்குமார்கள் இருந்துவருகிறார்கள். பல ஊர்களில் ஷாதுலிய்யா கலீஃபா (பிரதிநிதி)களையும் முகத்தம்களையும் நியமிப்பார்கள். கலீஃபாக்கள் இல்லாத நேரத்தில் முகத்தம்கள் (முற்படுத்தப்பட்டவர்கள்) முன்னின்று தரீக்கா வேலைகளை கவனித்து திக்ர் மஜ்லிஸை நடத்தும் பொறுப்பை மேற்கொள்வார்கள் இவ்வாறு கட்டுக்கோப்பாக முறைப்படி இன்றும் நடைபெற்று வருகிறது. என்பது பெருமைக்குரியதாகும் “அல்ஹம்து லில்லாஹ்” இவ்வாறு பின்பற்றி நடந்து நற்பயன் பெறுவோமாக! ஆமீன்.
தொகுப்பு : ஜாவியா காயல்பட்டணம்.

No comments:

Post a Comment