Sunday, 19 May 2013

ஷூரா" காரியங்களின் மூளை!!

அச்சிடுக
மின்-அஞ்சல்


26 ஏப்ரல் 2013 காலை 10:41
''காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன் வசனம் ஆலோசனைகளை (ஷூரா) செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும். நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவொன்றை எடுப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனின் வசனங்களை இறக்கி வழிகாட்டலாம். அதுவும் இல்லாத போது அவர்கள் அல்லாஹ்வின் உள்ளார்ந்த வழிகாட்டலின் பேரில் சுயமாக முடிவுகளை எடுக்கலாம். தனது தோழர்களின் அபிப்பிராயங்களைப் பெற வேண்டிய தேவை எதுவுமில்லை . அப்படியிருந்தும் தோழர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்ற கட்டளை நபி(ஸல்) அவர்களிடம் ஆலோசிக்கும் பண்பும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வரும் தலைவர்களும் பொறுப்புக்களை வகிப்பவர்களும் நபி ஸல் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிறரது கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.
வஹீயினால் மாத்திரம் தீர்மானிக்க முடியுமான விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஷூரா செய்ய முடியாது. ஆனால் மனித சிந்தனைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இஜ்திஹாதுக்கு உட்பட்ட விடயங்களில் ஆலோசனை பெறவும் வழங்கவும் முடியும்.
20132695230_samaa_tv
ஆலோசனை பெறுவது என்ற விஷயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்க முன்னர் அல்லது ஈடுபட முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும். பலரது அனுபவங்கள் சாறாக பிழியப்பட்டு அங்கு வழங்கப்படுகின்றது. அதில் அல்லாஹ்வின் அருள் இருக்கும். ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றிக்கூற வந்த நபி (ஸல்) அவர்கள் ''''உன்னிடம் அவன் ஆலோசனை கேட்டால் ஆலோசனை வழங்குவீராக.'''' (முஸ்லிம்) என்றார்கள். ஆலோசனை கேட்கப்படுபவர் நம்பிக்கை நாணயமானவராக இருக்க வேண்டும். (திர்மிதி) என்றும் கூறினார்கள். மறுமை நாளில் பாக்கியசாலிகளான வலப்பாரிசத்தவர்கள் உலகில் வாழும் போது ''''சத்தியத்தையும் அன்பையும் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பார்கள்'''' (90:17) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அந்த வகையில் பரஸ்பரம் ஆலோசித்துக் கொள்வது, பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். இந்தப் பண்பினால் சமூகத்தின் ஐக்கியம் பாதுகாக்கப்பட்டு ஒருவர் மற்றவரை மதிக்கும் தன்மை வளரும். இறுதி விளைவுகளுக்கு எல்லோரும் சேர்ந்து பொறுப்பாளர்களாவார்கள். மாறாக ஒரு சிலர் மாத்திரம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அவை அரைகுறையாக இருக்கும் என்பதுடன் பலரும் சந்தேகப்படுவதற்கும் கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் வழி வகுக்கும்.
சிறிய விஷயங்களில் கூட ஷூரா
இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அற்பமாகக்கருதும் இடங்களில் கூட ஷூரா செய்யும் படி அது பணிக்கின்றது.
01. கணவனும் மனைவியும் தமது குழந்தைக்கு பால் மறக்கடிக்க முனைந்தால் அதற்காக இருவரதும் பரஸ்பர ஒப்புதலும் கலந்தாலோசனையும் தேவை என்கிறது குர்ஆன்.
'''' (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரும் தத்தமது பரஸ்பர விருப்பத்தின் பேரிலும் ஆலோசனையின் பேரிலும் பால் குடிமறக்க நாடினால் அவ்விருவர் மீதும் குற்றமில்லை'''' (2.233) என அல்லாஹ் கூறுகின்றான்.
02. ''''பெண்களிடம் அவர்களது புத்திரிகள் விடயமாக ஆலோசனை கேளுங்கள்'''' (அபூதாவூத்) என்ற நபி (ஸல்) அவர்களது கட்டளையானது மகள்மாரின் நிச்சயதார்த்தத்துக்கு முன்னர் கணவன்மார் தமது மனைவிமார்களது ஆலோசனையைப் பெற வேண்டும் என்கிறது.
03. சுலைமான் (அலை) அவர்கள் பல்கீஸ் அரசிக்கு கடிதமொன்றை எழுதினார்கள். அக் கடிதத்தில் அவ்வரசி தனது மேலாண்மையை விட்டு விட்டு முஸ்லிமாக சுலைமான் (அலை) அவர்களிடம் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது அவர் தனது பிரதானிகளைப் பார்த்து ''''எனது பிரதானிகளே எனது விடயத்தில் நீங்கள் தீர்ப்பு (ஆலோசனை) கூறுங்கள். எனக்கு இது விடயமாக நீங்கள் (சாட்சியம் கூற) சமூகமளிக்கும் வரை நான் தீர்க்கமான முடிவுக்கு வரமாட்டேன் என்று கூறினாள் (27:32) இவ்வாறு தொடரும் வசனங்களில் இரு தரப்பாருக்கும் இடையிலான உரையாடல் பற்றி விளக்கமாக தெரிவிக்கப்படுகின்றது. இதிலிருந்து முற்காலங்களில் படை நடத்துதல், ஆட்சி செய்தல் போன்று கருமங்களில் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளமை பற்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
நபிகளார் (ஸல்) அவர்களது வாழ்வில் ஷூரா
01. பத்ர் யுத்தம் இடம்பெற முன்னர் நபி (ஸல்) அவர்கள் முதலில் முஹாஜிர்களிடம் ஆலோசனை பெற்றார்கள். அதன் பின்னர் தனது படையில் பெரும்பான்மையினராக இருந்த அன்ஸார்களிடம் வந்த அவர்கள் ''''மக்களே எனக்கு ஆலோசனை கூறுங்கள் '''' என்றார்கள். அன்ஸார்களின் சார்பில் பேசிய சஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் தமது தரப்பின் பூரண ஒத்துழைப்புக் கிட்டும் என்பதைத் தெரிவித்தார்கள்.
02. பத்ர் படை எந்த இடத்தில் வளையமிட்டிருக்க வேண்டும் என்ற விடயத்திலும் நபி (ஸல்) தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றார்கள். முதலில் அன்னார் ஓர் இடத்தைத் தெரிவு செய்த வேளை அதனை அவதானித்த யுத்தமுறைகள் பற்றிய நிபுணரான அல்ஹப்பாப் இப்னுல் முன்திர் (ரழி) அவர்கள் ''நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து முந்தவோ பிந்தவோ எம்மால் முடியாத அளவுக்கு அது அல்லாஹ் உங்களைத்தங்கும் படி கட்டளையிட்ட இடமா அல்லது மனிதர்களது பகுத்தறிவுக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுள்ளதா?'' எனக்கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '''' பகுத்தறிவுப் பிரயோகத்துக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுண்டு'''' என்றார்கள். அது கேட்ட அல்ஹப்பாப் (ரழி) அவர்கள் அப்படியானால் இது பொருத்தமான இடமல்ல. யாரசூலல்லாஹ்.... மக்களை அழைத்துக் கொண்டு வாருங்கள். குறைஷிப்படை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் நாம் தங்குவோம். அங்கு ஓர் நீர் தடாகம் அமைப்போம் என்று கூறினார். அந்த ஆலோசனையை அப்படியே அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள் ''''நீர்தான் அபிப்பிராயத்தை வெளியிட்டீர்'''' என்று கூறியதுடன் அதன்படியே நடந்தார்கள். (ரஹீகுல் மக்தூம்)
03. பத்ர் கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பது சம்பந்தமாகவும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களது அபிப்பிராயங்களைப் பெற்றார்கள்.
04. உஹத் யுத்தத்தில் ஈடுபட முன்னர் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அணுகி ஆலோசனை கேட்டார்கள். '''' நான் எது செய்ய வேண்டும் என எனக்கு ஆலோசனை கூறுங்கள்'''' என்றார்கள். யுத்தத்தில் சம்பந்தப்படத் தேவையில்லை என அன்ஸார்கள் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால் மற்றும் பலரது கருத்து வேறு விதமாக அமைந்தது. இறுதியில் யுத்தம் செய்வது என நபி(ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள் . உஹதில் ஈற்றில் தோல்வி ஏற்பட்டாலும் உஹதின் பின்னர் '''' அவர்களை நீர் மன்னிப்பீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. விடயங்களில் அவர்களிடம் ஆலோசனை பெறுவீராக (3:159) என்ற வசனம் இறக்கப்பட்டது. உஹதுக்கு முன்னர் தோழர்களிடம் ஆலோசனை கேட்ட நபிகளாருக்கு தொடர்ந்தும் அவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி இவ்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
05. நபி (ஸல்) அவர்கள் கூட ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் தனது தோழர்களுக்கு சில கட்டளைகளையிட்ட போது அவர்கள் அவற்றை அமுலாக்கத்தயங்கிய சந்தர்ப்பத்தில் அன்னார் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தனது மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் தான் ஆலோசனை கேட்டது மாத்திரமின்றி அதன்படியே அவர்கள் முடிவெடுத்தார்கள்.
நபித் தோழர்களது பண்புகள் பற்றிக் கூறும் அல்குர்ஆன் (42:36- 38) ஈமான், தவக்குல், பெரும் பாவங்களைத் தவிர்த்தல், கோபம் வந்தால் மன்னிப்பது, தமது ரட்சகனின் கட்டளைகளுக்கு அடிபணிவது, தொழுகையை நிலை நிறுத்துவது, தமது காரியங்களை ஆலோசனையின் பேரில் அமைத்துக்கொள்வது, அல்லாஹ் வழங்கிய சொத்து செல்வங்களிலிருந்து செலவு செய்வது ஆகிய எட்டுப் பண்புகள் அவர்களிடம் இருப்பதாக கூறுகிறது. இங்கு ஆறாவது பண்பாக தொழுகையை நிலைநிறுத்துவதையும் எட்டாவது பண்பாக ஜகாத் கொடுப்பதையும் கூறும் அல்லாஹ் தொழுகைக்கும் ஜகாத்துக்கும் இடைப்பட்ட பண்பாக 'அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது தன்மையாகும்' என்று ஏழாவது பண்பாக ஷூராவைக் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஷூராவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இமாம் இப்னு கதீர் குறிப்பிடுகிறார்.
அல்குர்ஆனில் '''' அஷ்ஷூரா'''' (கலந்தாலோசிப்பது 42) என்ற பெயரிலான தனியான அத்தியாயமே உள்ளது. ''''அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது தன்மையாகும். (42:38) என்ற வசனம் மக்காவில்தான் இறக்கப்பட்டது என்று கூறும் ஷஹீத் சையித் குதுப் அவர்கள், ஷூரா என்பது அரச விவகாரங்களுடன் மட்டும் குறுகியதல்ல. முஸ்லிம் சமூகத்தின் வாழ்வின் சகல பகுதிகளுக்கும் விரிந்தது என்பதை இது காட்டுகிறது என்றார்.
முஸ்லிம் சமூகத்தில் ஏதாவது ஒரு முக்கிய தகவல் பரிமாறப்படும் போது சிலர் அதன் நம்பகத் தன்மையைப் பற்றி அலசி ஆராயாமல் துறைசார் நிபுணர்களிடம் அதுபற்றி கேட்டறிய முன்னர் அத் தகவலை சமூகத்தில் பரப்பக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறும்போது, ''''அவர்களுக்கு பாதுகாப்போடு அல்லது அச்சத்தோடு தொடர்பான ஒரு விடயம் (தகவல்) எட்டுமானால் அதனை அப்படியே பரப்பிவிடுவார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமும் அவர்களில் அதிகாரமுள்ளவர்களிடமும் தெரிவித்திருந்தால் அவர்களிலிருந்து அதனை ஆய்வு செய்பவர்கள் அதனை (நன்கு) அறிந்துகொள்வார்கள். (4:83) என்கிறான்.
இங்கு வந்துள்ள 'உலுல்அம்ர்' எனப்படுவோர் துறைசார்ந்தவர்களாக, சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பவர்களாவர். சமூகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விஷயங்களில் முடிவுகளை எடுக்க முன்னர் இப்படியானவர்களை அணுகி ஆலோசனை பெறுவதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
ஹுலபாஃஉர்ராஷிதூன்கள்
அபூபக்கர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலப்பிரிவில் ஏதாவது முக்கிய அம்சங்களில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை வந்தால் முதலில் குர்ஆனிலும் சுன்னாவிலும் தீர்வுகளை தேடுவார்கள். அங்கு தீர்வு இல்லாதபோது இதுபோன்ற பிரச்சினைகள் ஏதாவது நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஏற்பட்டு அதற்கு அன்னார் தீர்வுகளை வழங்கியமை பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா என தோழர்களிடம் விசாரிப்பார்கள். இல்லை எனப் பதில் வந்தால் மக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள் பிரசித்தி பெற்ற சஹாபாக்களை மதீனாவிலிருந்து வெளியே சென்று குடியேற அனுமதிக்கவில்லை.
அடிக்கடி அவர்களை கலந்தாலோசிக்கத் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்தார்கள். அவர்களது அவையில் இளம் வயதினரான அல்லது வயது முதிர்ந்த அல்குர்ஆனில் தேர்ச்சிபெற்ற (குர்ராஉ)வர்கள் தான் இருந்தார்கள் என ஸஹீஹுல் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நிஹாவந்த்' போருக்கு முன்னர் உமர் (ரழி) அவர்கள் முக்கியமான தோழர்களுடன் கலந்தாலோசித்தார்கள். '''ஷூரா இன்றி எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்திலும் நலவே கிடையாது''' என்றும் அவர்கள் ஒரு தடவை கூறினார்கள்.
ஷூராவின் துறைகள்
ஷூரா என்பது பல்துறை சார்ந்தவர்களது அனுபவங்களையும் அறிவுகளையும் பெறுவதற்கான ஒரு முயற்சியாகும். ஒருவர் சகலகலா வல்லவராக இருப்பது சாத்தியமில்லை. வித்தியாசமான பல கோணங்களில் சிந்திப்பவர்களது கருத்துக்கள் கேட்கப்படும் போது சமூகம் வளர்ச்சி காணும். இமாம்குர்துபீ அவர்கள் இப்னு குவைஸ் மின்தாத் எனப்படும் மாலிகி மத்ஹப் இமாம் குறிப்பிடுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்கள். ''''ஆட்சியாளர்கள் தமக்குக் குழப்பமான சன்மார்க்க விடயங்களில் மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும். யுத்தங்களுடன் தொடர்பான விடயங்களை படையிலுள்ள முக்கியஸ்தர்களிடமும், சமுதாய நலன்கள் பற்றி மக்களுக்கு மத்தியிலுள்ள முக்கியஸ்தர்களிடமும் நாட்டின் நலன், அதனை வளப்படுத்துவது பற்றிய விடயங்களை அமைச்சர்கள், கவர்னர்களிடமும் கேட்க வேண்டும்'''' என்கிறார்கள்.
தற்காலத்திலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், தொடர்புசாதனம், உளவியல் என்று துறைகள் பலதரப்பட்டவையாக இருப்பதால் பல்துறை சார் நிபுணர்களது ஆலோசனைகள் பெறப்பட்டட பின்னரே மிக முக்கிய தீர்மானங்களுக்கு முஸ்லிம் சமூகம் வர வேண்டும்.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு மாத்திரமல்ல எதிர்காலத்திற்கான காத்திரமான திட்டங்களை வகுப்பதற்கும் பிற சமூகங்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் இது அவசியப்படுகிறது.
எமது முக்கிய தருணங்களின்போது நாம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு கட்டளையிட்டிருப்பதால் ஷூராவின்பொழுது அல்லாஹ்வின் அருள் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆக்கம் : அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபழீல்- நளீமி

No comments:

Post a Comment